

மும்பை,
கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது. இதுதொடர்பாக மாநில அரசுக்கும், பல்கலைக்கழக வேந்தரான கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் இடையே மோதல் உண்டானது.
பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரி பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த் கடிதம் எழுதினார். இதற்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இருப்பினும் மாணவர்களின் உயிரை பணயம் வைக்க முடியாது என்றும், எனவே பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
இந்த நிலையில், பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்தது. அப்போது, அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மந்திரி உதய் சாமந்த் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விரும்பினால் தெரிவிக்கலாம்
கொரோனா காரணமாக பல்கலைக்கழக தேர்வு அட்டவணை பாதிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனதில் உள்ள சலனத்தை முடிவுக்கு கொண்டு வர இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தொழில்முறை அல்லாத (கன்வென்ஷனல்) படிப்புகளை பயிலும் மாணவர்கள் தேர்வுகளை எழுத விரும்பினாலோ அல்லது தேர்வுகளை எழுத விரும்பாவிட்டாலோ அதுபற்றி அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். தேர்வு எழுத விரும்பாதவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
தொழில்முறை படிப்புகளாக பொறியியல், மருந்தகம், ஓட்டல் மேலாண்மை, கட்டிடக்கலை போன்ற படிப்புகளுக்கான தேர்வுகளுக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த உச்ச அமைப்புகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களுக்கு கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு தேர்வுகள் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும்.
முந்தைய அனைத்து செமஸ்டர்களிலும் தேர்ச்சி பெற்று, இறுதி செமஸ்டர் தேர்வை எழுத விரும்பாத மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர்களின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.