உன்னாவ் கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 16ந்தேதிக்கு ஒத்திவைப்பு

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தொடர்புடைய உன்னாவ் கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 16ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
Published on

உன்னாவ்,

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் சிறுமி ஒருவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. சிறுமி காவல் நிலையம் சென்று நியாயம் கிடைக்காத காரணத்தினால் யோகி ஆதித்யநாத் வீடு முன்னதாக தீ குளிக்க முயன்றார். இதனையடுத்து 2018 ஏப்ரலில் இவ்விவகாரம் வெளியே தெரியவந்தது.

இதன்பின் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 13ந்தேதி செங்கார் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்து வருகிறார். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, போலீஸ் காவலுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் தந்தை மரணம் அடைந்து விட்டார். இது தொடர்பாகவும் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில் கடந்த ஜூலை இறுதியில் சிறுமி சென்ற கார் ரேபரேலியில் விபத்தில் சிக்கியது. இதில் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவருடன் சென்ற இரு பெண் உறவினர்கள் விபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் ரேபரேலி சிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்றபோது சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள உன்னாவ் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்டு 1ந்தேதி விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையின்போது, நீதிபதிகள் 2 அதிரடி உத்தரவு பிறப்பித்தார்கள்.

முதல் உத்தரவு, உன்னாவ் சிறுமி கற்பழிப்பு, விபத்து மற்றும் தொடர்புடைய பிற வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற வகை செய்துள்ளது.

இரண்டாவது உத்தரவு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உத்தரபிரதேச மாநில அரசு ரூ.25 லட்சத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

இதுபற்றி டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவல் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், செங்காரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட வேண்டும். செங்கார் 15 நாட்களில் தூக்கிலிடப்பட வேண்டும். அவரை விட்டு விட்டால், நாட்டிலுள்ள பல நிர்பயாக்கள் மனமுடைந்து போய் விடுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ. நேற்று தனது வாதங்களை முன்வைத்து பின்னர் முடித்து கொண்டது. கடந்த டிசம்பர் 2ந்தேதி கேமிரா முன்னிலையில் அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி நீதிமன்றம் ஒன்றில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், வழக்கின் தீர்ப்பினை நீதிபதி வருகிற 16ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com