குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்பினர் கண்டன பொதுக்கூட்டம்

திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பினர் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Published on

திருப்பூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் சிராஜூல் இஸ்லாம் மஸ்ஜித் மற்றும் மதரஸா சார்பில் பொதுக்கூட்டம் நேற்று இரவு திருப்பூர் நொய்யல் வீதியில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்துக்கு ஹாலிதீன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இக்பால் வரவேற்றார். தலைவர் முகமது மற்றும் அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில தலைவர் அல்தாபி, மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது, முகமது சிராஜூத்தீன், நூர் முகமது ஆகியோர் பேசினார்கள். முடிவில் துணை செயலாளர் அஸ்கர் அலி நன்றி கூறினார்.

பொதுக்கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, திருப்பூரில் நலிந்துவரும் பின்னலாடை தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரான் மேல் போர் தொடுக்கும் அமெரிக்காவை இந்த கூட்டம் கண்டிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவ ஐ.நா. சபை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஜமாஅத் உலமா, ஐக்கிய ஜமாஅத், அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதாக காட்டும் வகையில் பா.ஜனதா சார்பில் தொலைபேசி மூலம் வாக்களிப்பது என்பது கீழ்த்தரமான செயல்.

குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கூடாது என்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பெண் பேராசிரியர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலமாக மாணவர் சமுதாயம் பொங்கி எழும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com