வாஷிங்டன்,
கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழித்தாக வேண்டும் என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கனவு. ஆனால் அவர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் இரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும்கூட இதில் நல்ல பலன் ஏற்படவில்லை.
இந்த நிலையில், தென்கொரிய ராணுவ மந்திரி ஜியோங் கியோங் வாஷிங்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனில், அந்த நாட்டின் ராணுவ மந்திரி பொறுப்பு வகிக்கும் பேட்ரிக் சனாஹனை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்கிற விவகாரம் முக்கிய இடம் வகித்தது. இருவரும் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட உறுதி எடுத்துக்கொண்டனர்.
மேலும், வடகொரியா பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்பட பல விஷயங்களில் இரு தரப்பினரும் ஒருங்கிணைத்தலையும், ஒத்துழைப்பையும் அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.