இந்தியா கேட்டுக்கொண்டதால் அமெரிக்கா நடவடிக்கை; மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா கைது - நாடு கடத்தி வர ஏற்பாடு

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
Published on

மும்பை,

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.

கடல்வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர். மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டும் போலீசாரால் உயிரோடு பிடிக்கப்பட்டான். பின்னர் அவன் தூக்கிலிடப்பட்டான்.

அமெரிக்காவில் சிறை

இந்தநிலையில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட பயங்கரவாதி தஹாவூர் ராணா அமெரிக்காவில் பிடிபட்டார். கனடா தொழில் அதிபரான தஹாவூர் ராணா முதலில் அமெரிக்காவில் உள்ள சிகோகாவில் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க போலீசார் டென்மார்க் மற்றும் இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு உதவி செய்ததாக தஹாவூர் ராணா மீது குற்றம்சாட்டினர். இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க கோர்ட்டு டென்மார்க்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியது, லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு உதவிய குற்றத்துக்காக தஹாவூர் ராணாவுக்கு 168 மாதங்கள் சிறை தண்டனை வழங்கியது. ஆனால் இந்தியாவில் தாக்குதல் நடத்த அவர் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் இருந்து விடுவித்து இருந்தனர்.

இந்தியா கோரிக்கை

இதற்கிடையே மும்பை தாக்குதல் வழக்கில் அமெரிக்காவில் கைதாகி சிறையில் இருக்கும் மற்றொரு குற்றவாளி டேவிட் ஹெட்லி, இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தஹாவூர் ராணா லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு நிதி உதவி அளித்தார் என வாக்குமூலம் அளித்து இருந்தார். தஹாவூர் ராணா, டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இந்தநிலையில் தஹாவூர் ராணா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் தண்டனை காலம் முடியும் முன்பே அமெரிக்க ஜெயிலில் இருந்து கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.

இதையறிந்து இந்திய அரசு மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்து இருந்தது.

மீண்டும் கைது

இதைதொடர்ந்து அவர் கடந்த 10-ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அந்த நாட்டின் அரசு தரப்பு வக்கீல் ஜான் ஜே. லுலிஜியான் கூறுகையில், இந்திய அரசுடன் கடந்த 1997-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி நாடு கடத்தும் வகையில் தஹாவூர் ராணா கைது செய்யப்பட்டு உள்ளார் என்றா.

இது தொடர்பான விசாரணை வருகிற 30-ந் தேதி கலிபோர்னியாவில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நடக்க உள்ளது. கொரோனா தொற்றால் தனிமையில் உள்ள தஹாவூர் ராணா அப்போது விசாரணையில் போன் அல்லது காணொலி காட்சி மூலம் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. எனவே மும்பை வழக்கு முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

வெளிச்சத்துக்கு வரும்

இதுகுறித்து மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் மராட்டிய அரசு தரப்பு வக்கீல் உஜ்வால் நிகம் கூறுகையில், " பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லி ஏற்கனவே காணொலி காட்சி மூலம் மும்பை பயங்கரவாத தாக்குதலில் தஹாவூர் ராணாவுக்கு தொடர்பு உள்ளது என கூறியுள்ளார். தனக்கு ராணா நிதி உதவி செய்ததாகவும் ஹெட்லி கூறியுள்ளார். தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் ஐ.எஸ்.ஐ. ஆதரவாளர்கள் பலரும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுவார்கள் " என்றார்.

இதற்கிடையே ராணாவை நாடு கடத்தி விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com