ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்க உதவிய அமெரிக்க வாலிபர் கைது

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பதற்கான தகவலை பாதுகாக்க கணினி குறியீட்டை உருவாக்கிய குற்றத்திற்காக அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on

வாஷிங்டன்,

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவனாக செயல்பட்ட பாக்தாதி சிரியாவில் இத்லிப் நகரில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். பாக்தாதி கொல்லப்பட்டதற்கு தகுந்த பதிலடி அளிப்பதாகவும் ஐ.எஸ் அமைப்பு அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த தாமஸ் ஒசாட்சின்ஸ்கி என்பவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆட்சேர்ப்பு தகவலை பாதுகாக்க கணினி குறியீட்டை உருவாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒசாட்சின்ஸ்கியின் கணினி குறியீடானது, சமூக ஊடகங்கள் தடை செய்ய முடிவு செய்த பயங்கரவாதிகளின் தகவல்களை அந்த தளத்தில் தொடர்ந்து இருக்கவும், பரவவும், தானாக நகலெடுத்து பாதுகாக்கவும் பயன்படும்.

எப்.பி.ஐ அதிகாரிகள் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் போன்று போலியாக செயல்பட்டபோது ஒசாட்சின்ஸ்கி தனது குறியீட்டை பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்க முயன்றதாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com