காரைக்குடியில் துணிகரம்: தொழில் அதிபர் வீட்டில் 94 பவுன் நகை கொள்ளை

காரைக்குடியில் தொழில் அதிபர் வீட்டில் 94 பவுன் நகைகள் கொள்ளை போனது. கைவரிசை காட்டிய மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
Published on

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர்நோம்பு பொட்டல் பகுதியை சேர்ந்தவர், இளங்கோமணி. தொழில் அதிபரான இவர் காரைக்குடி செக்காலை ரோட்டில் ஜவுளிகடை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் இளங்கோமணி குடும்பத்துடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ள சென்று பார்த்த போது 4 அறைகளின் கதவுகள் மற்றும் அதில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அவை திறந்து கிடந்தன.

மேலும் பீரோக்களில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 94 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. மேலும் சில பெட்டிகளையும் காணவில்லை. அவற்றிலும் சில விலை உயர்ந்த பொருட்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட கூடுதல் பாலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மோப்பநாய் லைக்கா கொண்டு வரப்பட்டு, அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு, பெரியார் சிலை பஸ்நிறுத்தம் வரை ஓடியது. தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் கூறும்போது, கொள்ளையில் ஈடுபட்டமர்ம கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com