வியட்நாம் கப்பல் சென்னை வந்தது துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு

கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதற்காக வியட்நாம் கப்பல் சென்னை வந்தது துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Published on

சென்னை,

இந்திய கடலோர காவல்படையுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக, வியட்நாம் கடலோர காவல்படைக்கு சொந்தமான சி.எஸ்.பி. 8001 என்ற கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேற்று காலை வந்தது. வியட்நாமில் இருந்து கடலில் 3 ஆயிரத்து 575 நாட்டிக்கல் மைல் தூரம் கடந்து சென்னை வந்த இக்கப்பலுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியில் துறைமுக அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே செய்துகொண்ட நட்புறவு உடன்பாடு அடிப்படையில் நாளை (வியாழக்கிழமை) இந்திய கடற்பரப்பில் வியட்நாம் கப்பலுடன், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 3 கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர், ஒரு டோர்னியர் விமானம் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட இருக்கின்றன. இதனுடன் தேசிய கடல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் கப்பலும் (சாகர் மஞ்சுஷா) பங்கேற்கிறது.

கடல் கொள்ளை தடுப்பு, எல்லை தாண்டி மீன் பிடித்தல் தடுப்புக்கான ஒத்திகை நிகழ்வுகளும் இந்த கூட்டு பயிற்சியில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மேலும் இன்று (புதன்கிழமை) நட்புறவு கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு வியட்நாமில் இருந்து கூட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக கப்பல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com