விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கத்தில் மின்சார என்ஜின் மூலம் 6 ரெயில்கள் இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி

விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கத்தில் 6 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Published on

கடலூர்,

விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே டீசல் என்ஜின் மூலம் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையில் மின் மயமாக்கல் பணிகள் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், இம்மார்க்கத்தில் மின்சார என்ஜின் மூலம் ரெயில் இயக்குவது குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வறிக்கை தென்னக ரெயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே மின்சார என்ஜின் மூலம் பயணிகள் ரெயில் இயக்க தென்னக ரெயில்வே அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் பயணிகள் ரெயில் முதன் முதலாக டீசல் என்ஜினுக்கு பதிலாக மின்சார என்ஜின் மூலம் நேற்று காலை 5.55 மணிக்கு புறப்பட்டது.

இந்த ரெயில் பண்ருட்டி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர்,கடலூர் துறைமுகம், சிதம்பரம் வழியாக மயிலாடுதுறையை சென்றடைந்தது. டீசல் என்ஜினுக்கு பதில், மின்சார என்ஜின் மூலம் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டதை வரவேற்கும் வகையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம் உள்ளிட்ட ரெயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பயணிகள் வரவேற்றனர்.

விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில்செல்லும் ரெயில்களில் 6 ரெயில்கள் மட்டும் தற்போது மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்படுகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு தினமும் காலை 5.55 மணிக்கு பயணிகள் ரெயில் (வண்டி எண் 56873) புறப்படுகிறது, இதை தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு பயணிகள் ரெயில் (வண்டி எண் 56875), மாலை 5.40 மணிக்கு பயணிகள் ரெயிலும் (வண்டி எண் 56877)விழுப்புரத்தில் இருந்து புறப்படுகிறது.

இதேபோல்மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு காலை 5.40 மணிக்கு பயணிகள் ரெயில் (வண்டி எண் 56874) புறப்படுகிறது, இதை தொடர்ந்து மாலை 3.45 மணிக்கும் (வண்டி எண் 56876), மாலை 5.45 மணிக்கும் (வண்டி எண் 56878) மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்துக்கு மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்படும் பயணிகள் ரெயில் புறப்படுகிறது. இந்த மார்க்கத்தில் டீசல் என்ஜினுக்கு பதிலாக மின்சார என்ஜின் மூலமாக ரெயில்கள் இயக்கப்படுவதால் பயண நேரம் குறையும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக நேற்று காலைவிழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு புறப்பட்ட பயணிகள் ரெயில்காலை 6.55 மணிக்குகடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. அங்குதென்னக ரெயில்வே பயணிகள் நலச்சங்க தலைவர் முத்துக்குமரனார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பயணிகள் வரவேற்றனர். பின்னர் என்ஜின் டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ரெயில்வே நிலைய மேலாளர் முரளிதர், பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் ராஜ்மோகன், ராமகிருஷ்ணா, சித்ரகலா, சுப்பிரமணியன், குணா, ரவிக்குமார், டாக்டர் ராஜேந்திரன், சண்முகம், திருவள்ளுவர், நடராசன், ராஜா, முரளிகிருஷ்ணன், வெங்கடேசன், வணிகர் சங்கத்தினர், பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com