விழுப்புரத்தில், லாரி மீது கார் மோதல், பெண் உள்பட 2 பேர் பலி - கேரளாவை சேர்ந்தவர்கள்

விழுப்புரத்தில் லாரி மீது கார் மோதியதில் கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Published on

விழுப்புரம்,

கேரளா மாநிலம் கோட்டயம் அருகே முள்ளான் கொல்லி பகுதியைச் சேர்ந்த ஜோஸ்(63), இவரது உறவினர்கள் ஜெபஸ்டீன்(52), ஜெரீம்ஜோஸ் மனைவி லிஸ்பெத்(27) ஆகியோர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். காரை வின்சென்ட்(41) என்பவர் ஓட்டினார்.

நேற்று பிற்பகல் விழுப்புரம் புறவழிச்சாலையில் வழுதரெட்டி என்ற இடத்தில் வந்தபோது சாலை ஒரத்தில் அமைக்கப்பட்டிருந்த செடிகளுக்கு சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் தண்ணீர் பாய்ச்சுக்கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. காரின் முன்பகுதி பெருமளவு லாரியின் பின்பகுதிக்குள் சொருகி கொண்டது.

இதில் டிரைவர் வின்சென்ட் உடல் நசுங்கி காருக்குள்ளேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜோஸ் உள்ளிட்ட 3 பேரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் துணை போலீஸ்சூப்பரண்டு திருமால், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார் கதவுகளை உடைத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜோஸ் உள்ளிட்ட மூன்று பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி லிஸ்பெத் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான காரை மீட்பதற்காக ராட்சத கிரேன் வரவைழக்கப்பட்டது. சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு லாரியின் அடியில் சொருகி நின்ற காரை போலீசார் மீட்டனர். இதற்கிடையே விபத்தில் பலியான வின்சென்ட் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com