விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் திடீரென இறந்தார். அவரின் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்துவிட்டதாக கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவரும், குருவன்குப்பத்தை சேர்ந்த பிரியா (24) என்பவரும் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பிரியா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 27-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் பிரியாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும், குழந்தையும் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி பிரியாவின் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டதால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியா நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

இந்த நிலையில் பிரியாவின் உறவினர்கள் நேற்று விருத்தாசலம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள், அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது பிரியாவின் வயிற்றில் பஞ்சு வைத்து டாக்டர்கள் தையல்போட்டு விட்டனர். இதனால் தான் அவரது வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு இறந்துவிட்டார். எனவே பணியின் போது அஜாக்கிரதையாக செயல்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பிரியாவின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரியா சாவு குறித்து புகார் கொடுங்கள், அதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com