ஈரோட்டுக்கு நாளை வருகை: 4 ஆயிரத்து 642 பேருக்கு நல உதவிகள்-ரூ.151½ கோடி திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வெள்ளிக்கிழமை) ஈரோடு வருகிறார். அவர் ரூ.151 கோடியே 57 லட்சம் செலவிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 4 ஆயிரத்து 642 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
Published on

ஈரோடு,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) அவர் ஈரோடு வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் செய்யப்பட்டு உள்ள வளர்ச்சித்திட்ட பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா 17-ந் தேதி (நாளை) காலை 10 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. விழாவுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலை வகிக்கிறார்.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அவர், ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டு உள்ள வளர்ச்சிப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த துறைகள் மூலம் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 642 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். இதன் மொத்த மதிப்பு ரூ.151 கோடியே 57 லட்சம் ஆகும்.

அதாவது, நிறைவுற்ற வளர்ச்சித்திட்ட பணிகள் 13. இதன் மதிப்பு ரூ.21 கோடியே 73 லட்சம். புதிதாக தொடங்கப்பட அடிக்கல் நாட்டிய திட்டங்கள் 14. இதன் மதிப்பு ரூ.76 கோடியே 12 லட்சம். 4 ஆயிரத்து 642 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மதிப்பு ரூ.53 கோடியே 71 லட்சம். ஆக மொத்தம் ரூ.151 கோடியே 57 லட்சம் மதிப்பிலான திட்டங்களை ஈரோடு மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் வழங்குகிறார்.

விழாவில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் ஆவணப்படத்தையும் முதல்-அமைச்சர் வெளியிடுகிறார். இந்த விழாவைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

பின்னர் ஈரோடு மாவட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக்குழு நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இந்த நிகழ்வுகளில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), தோப்பு என்.டி.வெங்கடாசலம் (பெருந்துறை), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), எஸ்.ஈஸ்வரன்(பவானிசாகர்), இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பாலமுரளி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சதீஸ்குமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com