தஞ்சாவூர்,
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இவற்றுடன் தமிழகத்தில் உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இவற்றில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 3 தொகுதிகள் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டவை. தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிகுட்பட்டவையாகும்.
நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம், புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.
தஞ்சை சட்டசபை தொகுதியில் 286 வாக்குச்சாவடிகள் உள்ளன. சட்டசபை இடைத்தேர்தலில் 5,722 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 3,662 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 4005 வி.வி.பேட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. சட்டசபை இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம், புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். அதில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் வாக்குச்சீட்டு பொருத்தப்பட்டது. இந்த பணியை தேர்தல் பார்வையாளர்கள் ஜெகதீஸ்வர், நரேந்திர சங்கர் பாண்டே ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இவர்களுடன் தஞ்சை வருவாய் கோட்டாட்சியரும், சட்டசபை இடைத்தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ் உடன் இருந்தார்.