3 இடங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு சேலம் சிறையில் நெல்லை கண்ணன் அடைப்பு

3 இடங்களுக்கு அலைக் கழிக்கப்பட்டு சேலம் சிறையில் நெல்லை கண்ணன் அடைக்கப்பட்டார்.
Published on

சேலம்,

நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் கடந்த மாதம் (டிசம்பர்) 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், குடியுரிமை பாதுகாப்பை வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வினர் நெல்லை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அப்போது அவர் பெரம்பலூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை கண்ணனை பெரம்பலூரில் வைத்து போலீசார் கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே அவர் மீது மேலப்பாளையம் போலீசார் மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், நெல்லை கண்ணனை நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 13-ந்தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு பாபு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். பின்னர் நெல்லை கண்ணனை நிர்வாக காரணங்களுக்காக நேற்று முன்தினம் சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்தனர்.

அப்போது அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் பாளையங்கோட்டை சிறையில் இருந்த அவரை போலீசார் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில் நெல்லை கண்ணனை மதுரை சிறையில் இருந்து வேனில் அழைத்து வந்து நேற்று மதியம் 1 மணி அளவில் சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சேலம் மத்திய சிறை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாளையங்கோட்டை, மதுரை, சேலம் என்று அலைக்கழிக்கப்பட்ட நெல்லைகண்ணன் பின்னர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com