நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் - கழிவுநீரால் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்

நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் கழிவுநீரால் பொது மக்களுக்கு தொற்று நோய்கள் மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள 10-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் டிபன்ஸ் காலனி உள்ளது. இங்கு 3-வது தெரு மற்றும் 3-வது குறுக்கு தெருவில் உள்ள சாலைகளின் இருபுறமும் உள்ள கால்வாய்களில் குப்பைகளும் கழிவுகளும் சேர்ந்து வருகின்றன.

இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு விடுவதால், அந்த கால்வாய் மூலம் வரும் கழிவு நீர் சாலையின் நடுவே நீண்ட நாட்களாக தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து பலவிதமான மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சாலையில் உள்ள கழிவுநீரில் நடந்து செல்லும்போது அவர்களுக்கு பலவிதமான தொற்று நோய்கள், உடல் அரிப்பு போன்றவை ஏற்படுவதாக தெரிகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்றி சாலையோரங்களில் உள்ள கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றும், எந்தவித நோய்த்தொற்று ஏற்படாதவாறு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com