கூடலூரில் தொடர் மழை: வயல்களில் தண்ணீர் தேக்கம்; அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

கூடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
Published on

கூடலூர்,

கூடலூர் பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் பெய்வது வழக்கம். இங்கு ஆண்டுதோறும் 6 மாதங்கள் மழைக்காலமாக இருக்கும். பருவமழை தொடங்கியதும் சிந்தாமணி, மரநெல், கந்தகசால் உள்ளிட்ட நாட்டு ரக நெல் நாற்றுக்களை தங்களது வயல்களில் விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். கூடலூர் முதல் கேரள மாநிலம் வயநாடு வரை நெல் விவசாயம் ஆண்டுதோறும் களைகட்டி வருகிறது. இதனால் நீலகிரியின் நெற்களஞ்சியம் என கூடலூர் பகுதி அழைக்கப்படுகிறது. நீர்பாசன திட்டங்கள் எதுவும் இல்லாத சூழலில் இயற்கையாக பெய்யும் தொடர் மழையால் வயல்களில் தேங்கி நிற்கும் நீரை கொண்டு நெல் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக பெய்தது. இதனால் நெல் விவசாயத்தை தொடங்க விவசாயிகள் யோசித்தனர். இருப்பினும் ஜூலை மாதம் முதல் கனமழை பெய்தது. இதனால் நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் முழு வீச்சில் இறங்கினர். பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து இன்றி இயற்கை முறையில் நெல் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். பல மாதங்கள் பராமரிப்புக்கு பிறகு கூடலூர் பகுதியில் நாட்டு ரக நெல் விளைந்து நிற்கிறது. இதனால் வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் வயல்களில் உள்ள நெற்கதிர்கள் பாதிக்கப்படும் சூழலில் உள்ளது. மேலும் அறுவடை பணியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இது குறித்து கூடலூர் விவசாயிகள் கூறியதாவது:-

கூடலூர் பகுதியில் சமவெளியில் விளைவிக்கப்படும் பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிடுவது இல்லை. மூதாதையர்கள் பயன்படுத்தி வந்த நாட்டு ரக நெல்லை பல தலைமுறைகளாக பயிரிட்டு பாதுகாத்து வரு கிறோம். இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் சொந்த பயன்பாட்டுக்கு நாட்டு ரக நெல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கேரள வியாபாரிகள் கூடலூர் பகுதியில் விளையும் நெல்லை ஆண்டுதோறும் வாங்கி செல்கின்றனர். நடப்பு ஆண்டில் அளவுக்கு அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால் நெல் விளைச்சலும் நன்றாக உள்ளது. தற்போது அறுவடை செய்யும் நிலையில் நெற்கதிர்கள் உள்ளன.

ஆனால் கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியை தொடங்க முடியவில்லை. கடந்த காலங்களில் தொழிலாளர்களை கொண்டு அறுவடை பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது கூலி உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் எந்திரம் கொண்டு அறுவடை செய்யப்படுகிறது. தொடர் மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் எந்திரங்கள் வயல்களில் இறங்கி அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. மேலும் நெற்கதிர்களும் சரிந்து வருகிறது. இதனால் அவை வீணாகும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com