

சென்னை,
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வானிலை மாற்றம் ஏற்பட்டு இதமான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், வடக்கு இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் மையப்பகுதியில் இருந்து தெற்கு லட்சத்தீவு பகுதிகள் வரை, தென் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத்தீவு பகுதிகளில் இருந்து மரத்வாடா வரை கடலோர கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதற்கிடையே காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும். 13, 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.