

சென்னை,
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசியதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். கடுமையான வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
இப்படி கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. குறிப்பாக மெரினா கடற்கரையில் புழுதிக்காற்று வீசியது. இதனால் காலையில் நடைபயிற்சிக்கு வந்திருந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் காற்று வீசி வருகிறது. கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றமாக உள்ளதால் மெரினா கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் இல்லை. வானம் சற்று மேகமூட்டமாக உள்ளது. காற்றும் வீசி வருவதால் தற்போது சென்னையில் இதமான சூழல் உள்ளது. இதற்கிடையே சென்னையில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.