வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தொடர்ந்து, நாளை 'டானா' புயலாக உருவெடுக்க உள்ளது. அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 25-ந்தேதி அதிகாலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா பூரி-சாகர் தீவு இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு பெரிய மழை ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை (புதன்கிழமை) தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 27-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com