தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 20 சதவீதம் குறைவு

அடுத்ததாக தொடங்க இருக்கும் வடகிழக்கு பருவமழையைத்தான் தமிழ்நாடு, புதுச்சேரி நம்பி இருக்கிறது.
மழை
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இயல்பை விட 20 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை குறைவு

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந்தேதி வரை கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த பருவமழை முற்றிலும் நீங்க, அக்டோபர் மாதம் 2-வது வாரம் வரை காலம் எடுத்துக்கொண்டாலும், செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.

அந்த வகையில் தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி பெறக்கூடிய மொத்த மழை என்பது 32.8 செ.மீ. ஆகும். இது இயல்பான மழை அளவு. நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் (29-ந்தேதி வரை) வரையிலான நிலவரப்படி, 25.8 செ.மீ. மழை கிடைத்திருக்கிறது. இது இயல்பைவிட 20 சதவீதம் குறைவு ஆகும்.

எல்நினோ தாக்கம்

இது கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நடப்பாண்டு வரையிலான தென்மேற்கு பருவமழை கால மழை அளவு புள்ளிவிவரங்களின்படி, மிகவும் குறைவான மழையை பெற்றிருக்கிறது. எல்நினோ தாக்கம் காரணமாக நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை குறைவாகவே பதிவாகியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியை பொறுத்தவரையில், தென்மேற்கு பருவமழையை காட்டிலும், வடகிழக்கு பருவமழையைத்தான் நம்பி இருக்கிறது.

சுட்டெரிக்கும் வெப்பம்

இருப்பினும் வடகிழக்கு பருவமழை கைக்கொடுக்காத பட்சத்தில், இந்த தென்மேற்கு பருவமழைதான் விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை கொடுக்கும் மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் இந்த தென்மேற்கு பருவமழை ஏமாற்றியுள்ளது. இப்போது வரை கோடை காலத்தில் கொளுத்தும் வெயில் போல, தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பம் சுட்டெரிக்கிறது.

திருநெல்வேலியில் அதிக மழை

தமிழ்நாட்டில் கோவை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது. திருநெல்வேலியில் மட்டும் இயல்பான அளவான 8.9 செ.மீ.யைவிட அதிகமாக 41.6 செ.மீ. மழையை கொட்டியுள்ளது. மேற்சொன்ன மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் இயல்பைவிட 5 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை மழை குறைந்திருக்கிறது.

தென்மேற்கு பருவமழை கைவிரித்த நிலையில், அடுத்ததாக தொடங்க இருக்கும் வடகிழக்கு பருவமழையைத்தான் தமிழ்நாடு, புதுச்சேரி மலைபோல் நம்பி இருக்கிறது. இந்த ஆண்டு இயல்பைவிட மழை அதிகமாக இருக்கும் என முன்கூட்டிய வானிலை கணிப்பில் கணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com