

சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரளப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (4-ந்தேதி) தொடங்க வாய்ப்புள்ளது. இதேபோல, தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய சத்தீஷ்கார் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வடக்கு தமிழகம் வரை விதர்பா, தெலுங்கானா மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதேபோல, 5-ந்தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும்.
வரும் 8-ந்தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளி லும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நெல்லை சேர்வலாறு அணை, பள்ளிப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. வெப்பநிலை இயல்பை ஒட்டியே காணப்படும்.
சென்னையை பொறுத்தவரை இன்று நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.