தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வாளர் தகவல்

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வாளர் தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை காலம் தற்போது இருந்தாலும், சமீப நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.

இந்த சூழலில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நிலவுகிறது என்றும், மேலும் தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) தொடங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வுகள் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் இன்று பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழையும், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

பொதுவாக தென் மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவதையே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே அதாவது வருகிற 26-ந்தேதி உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்திருக்கின்றனர்.

கோடை மழை கடந்த சில நாட்களாக பெய்த சூழலில், வருகிற 18-ந்தேதியில் (திங்கட்கிழமை) இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க இருப்பதாக வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com