நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - கலெக்டர், எம்.எல்.ஏ. வழங்கினர்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் 491 பயனாளிகளுக்கு ரூ.5.74 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வீரராகவராவ், ராமநாதபுரம் மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி பொதுமக்கள் நலனுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்கள், 400 வருவாய் கிராமங்கள் மற்றும் நகராட்சி பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 9 ஆயிரத்து 302 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் தகுதியான 5 ஆயிரத்து 180 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், ராமேசுவரம் மற்றும் கீழக்கரை தாலுகாக்களில் மட்டும் மொத்தம் 3 ஆயிரத்து 235 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 1,833 தகுதியான மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டு 491 பயனாளிகளுக்கு பணப்பயன் உடைய அரசு நலத்திட்ட உதவிகள் ரூ.5 கோடியே 74 லட்சத்து 54 ஆயிரத்து 500 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல பட்டா மாறுதல் ஆணை, அடிப்படை சான்றுகள் போன்ற 1,342 கோரிக்கை மனுக்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் துணை கலெக்டர் சுகபுத்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சிவசங்கரன், உதவி கலெக்டர் சரவணக்கண்ணன், ராம்கோ கூட்டுறவு தலைவர் முருகேசன் மற்றும் தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com