

சென்னை,
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கும் அனைவரையும் அழைத்து, மக்களின் நன்மைகளுக்காக என்னென்ன செயல்திட்டங்களை வைத்திருக்கிறார்கள்? என்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எந்தவிதமான அரச பதவிகளையும் ஏற்கப் போவதில்லை, சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ ஒருநாளும் எனது காலடித்தடம் படியாது என்று சபதம் ஏற்றது மட்டுமின்றி, அதை உறுதியாக கடைபிடித்து வருகிறேன். எந்த சமரசமுமின்றி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
தமிழ்நாட்டை அதன் பின்னடைவுகளில் இருந்து மீட்டெடுத்து, வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான பா.ம.க.வின் பயணத்தில் ஊடகங்கள் உறுதியாக துணை நிற்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
பா.ம.க. என்பது நல்ல கட்சி என்பது மட்டுமின்றி, மக்களுக்கான திட்டங்களை வகுப்பதில் சிறப்பாக செயல்படும் கட்சியும் ஆகும். பா.ம.க.வை சேர்ந்தவர்கள் மத்திய மந்திரிகளாக இருந்தபோது படைத்த சாதனைகள் ஏராளம்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்கள், தொலைநோக்குப் பார்வை, அறிவார்ந்த தலைமை என அனைத்திலும் சிறந்து விளங்கும் பா.ம.க. தமிழ்நாட்டை ஆண்டால், அது தமிழ்நாட்டை எந்த அளவுக்கு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு கொண்டு செல்லும் கடமை ஊடகங்களுக்கு உண்டு.
டாக்டர் அன்புமணி ராமதாசை கருணை அடிப்படையிலோ, வேறு அடிப்படையிலோ மக்களிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. திறமையை பரிசோதித்துப் பார்த்து, அதில் அவர் தேர்ச்சி பெற்றால் மட்டும் பரிந்துரை செய்தால் போதும்.
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கும் அனைவரையும் அழைத்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நன்மைகளுக்காகவும் என்னென்ன செயல்திட்டங்களை வைத்திருக்கிறார்கள்? என்பது குறித்து விவாதம் நடத்த ஊடகங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.