

குளச்சல்,
மார்த்தாண்டம் அருகே குழித்துறை கல்லுக்கெட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜன், தொழிலாளி. இவருடைய மகன் சுபின் (வயது 18). மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிறந்த நாள் ஆகும்.
இதையொட்டி, நேற்று தன்னுடன் படிக்கும் நண்பர்கள் சிலருடன் குளச்சல் அருகே குறும்பனை பகுதிக்கு சுற்றுலா சென்றார். அங்கு நண்பர்கள் அனைவரும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர்.
அலை இழுத்து சென்றது
அப்போது, கடலில் வந்த ராட்சத அலையில் சுபின் சிக்கினார். இதனால், அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டார். உடனே, நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் சுபினை அலை சுருட்டிக் கொண்டு இழுத்து சென்றது. தங்களின் கண் முன்பே சுபின் தண்ணீரில் மூழ்குவதை பார்த்து நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுபினை தேடினர். ஆனால், அவரது கதி என்னவென்று தெரியவில்லை.
சோகம்
மேலும் இதுதொடர்பாக கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிங்சிலி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். இன்று பிறந்த நாள் விழா கொண்டாட இருந்த நிலையில் கல்லூரி மாணவர் கடலில் மூழ்கிய சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.