

பெங்களூரு,
கர்நாடக மேல்-சபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பட்டீல் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
கவர்னர் உரையில் மசாலா, உப்பு, காரம், புளி எதுவும் இல்லை. இந்த உரை, ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு மக்கள் நலத்திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. முந்தைய காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசுகளின் திட்டங்கள் தான் கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ளன. இந்த பா.ஜனதா அரசின் சாதனை என்ன?.
நம்ப மாட்டார்கள்
மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கவர்னர் உரையில் எங்கும் குறிப்பிடவில்லை. பொதுவாக கவர்னரின் உரை, அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதை உணர்த்துவதாக இருக்கும். அரசின் புதிய திட்டங்கள் குறித்து இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவை எதுவும் இல்லை. கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா காட்டிய ஆர்வம், மக்கள் நலப்பணிகளில் இல்லை.
இந்த அரசு இருந்தும், இல்லாதது போல் உள்ளது. பொய் சொல்வதற்கு ஒரு எல்லை உள்ளது. ஆனால் அதிகமாக பொய் பேசுவதை யாரும் நம்ப மாட்டார்கள். வள்ளத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதாக அரசு சொல்கிறது. அந்த நிவாரணம் உண்மையிலேயே தகுதியானவர்களுக்கு போய் சேர்ந்துள்ளதா?.
தோல்வி அடைந்துவிட்டது
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பாருட்களை வழங்குவதிலும் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது. நிவாரணம் கிடைக்க மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். தவறு செய்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?.
கிருஷ்ணா மேல் அணை திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்ற காரணத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை மத்திய அரசு தேசிய திட்டம் என்று அறிவித்து நிதி உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு எஸ்.ஆர்.பட்டீல் கூறினார்.