ஹர்திக் படேலின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட், தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்

ஹர்திக் படேல் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளதால், அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஹர்திக் படேலின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட், தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்
Published on

புதுடெல்லி,

குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் விஸ்நகர் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இவ்வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

இதற்கிடையில், ஹர்திக் படேல் அண்மையில் காங்கிரஸில் இணைந்தார். தேர்தலில் ஜாம்நகர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹர்திக் படேல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஹர்திக் படேல் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைக்க கோரி மனுவை தாக்கல் செய்தார்.

மேலும், மனுவை அவசர மனுவாக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஹர்திக் படேல் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், ஹர்திக் படேலின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

இதனால், ஹர்திக் படேல் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஜாம்நகர் மக்களவை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 4-ம் தேதி கடைசி நாளாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com