கொடைக்கானல்,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி கொடைக்கானல் பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், நடிகர்கள் மற்றும் வியாபாரிகள் எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கொடைக்கானல் பகுதியில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று வரை கொடைக்கானல் தாலுகாவில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி நடிகர்கள் விமல், சூரியுடன் 2 இயக்குனர்கள் கொடைக்கானல் நகருக்கு வந்துள்ளனர். இங்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு வனத்துறையிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்றுதான் செல்லவேண்டும். ஆனால் இவர்கள் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பேரிஜம் ஏரிக்கு சென்று அங்கு மீன்பிடித்து உள்ளனர்.
இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இதையடுத்து சமூக ஆர்வலர் மகேந்திரன் மற்றும் உள்ளூர் மக்கள் போலீசில் புகார் அளித்ததுடன் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்தநிலையில் நடிகர்கள் பேரிஜம் ஏரியில் மீன் பிடித்தது குறித்து மாவட்ட வன அதிகாரி தேஜஸ்வி கூறியதாவது:-
கடந்த 17-ந் தேதி கொடைக்கானலில் வனத்துறை அதிகாரிகள் இல்லாத நிலையில் சில ஊழியர்கள் உதவியுடன் நடிகர்கள் விமல், சூரி உள்பட சிலர் பேரிஜம் ஏரிக்கு அனுமதி இன்றி சென்றுள்ளனர். இது குறித்து தற்போது தான் தகவல் வந்துள்ளது. தடை விதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற இவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. மோயர்பாயிண்ட் என்ற இடத்தில் உள்ள இரும்பு கேட்டை திறந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டும். ஆனால் அந்த கேட்டை திறந்து விட்டு அவர்களுடன் சென்ற வன ஊழியர்கள் யார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே நடிகர்கள் விமல், சூரி தரப்பினர் இ-பாஸ் பெற்றுதான் கொடைக்கானலுக்கு வந்தார்களா? அல்லது இ-பாஸ் இல்லாமல் வந்தார்களா? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகளும், பல்வேறு துறை அதிகாரிகளும் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொடைக்கானல் நகரில் இருந்து சாதாரண மக்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வர கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஆனால் வெளியூர்களை சேர்ந்த ஏராளமானோர் கொரோனா ஊரடங்கு காலத்தில் கொடைக்கானலுக்கு வந்து முகாமிட்டு இருப்பது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இதன் காரணமாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடி பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலர் அங்கு வாகனத்தை நிறுத்தாமல் வந்து விடுகின்றனர். மேலும் அதிகாரிகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. எனவே மாவட்ட நிர்வாகமும், அரசும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றனர்.