மூலனூர்,
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணைப்பகுதியில் இருந்து தொடங்கும் அமராவதி ஆறு கரூர் மாவட்டத்தில் காவிரியோடு கலக்கிறது. இந்த இடைப்பட்ட பகுதியில் அமராவதி ஆற்றில் மணல் அதிகமாக காணப்பட்டது. இந்த மணலை மர்ம கும்பல் வாகனங்களில் கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தது. இந்த மணல் கடத்தலால் அமராவதி ஆற்றில் இருந்த மணல் வளம் முற்றிலும் தீர்ந்து போனது.
இதன் காரணமாக அமராவதி ஆற்றின் கரையோரம் இருந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து விவசாயம் கேள்விக்குறியானது. ஆனாலும் அமராவதி ஆற்றில் மணல் காணப்படும் இடங்களில் மர்ம ஆசாமிகள் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மூலனூர் அருகே அமராவதி ஆற்றில் வேன் மூலம் மணல் கடத்தப்படுவதாக தாராபுரம் தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தாசில்தார், கன்னிவாடி வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமாரை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார். உடனே வருவாய் ஆய்வாளர் தன்னுடன் 2 கிராம நிர்வாக அதிகாரிகளை அழைத்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் அமராவதி ஆறு ஒத்தமான்துறை பகுதிக்கு சென்றார். அப்போது ஆற்றில் உள்ள மணலை மூடையாக கட்டி வேனில் 3 பேர் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அந்த 3 ஆசாமிகளும், அங்கிருந்து நேராக ஆற்றின் கரையோரம் இருந்த ஒரு வீட்டிற்கு ஓடினர். அவர்களை பின் தொடர்ந்து வருவாய் ஆய்வாளரும் சென்றார். அப்போது அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் மணல் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இந்த மணல் மூட்டைகளை வருவாய் ஆய்வாளர் தனது செல்போனில் படம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேர் கொண்ட கும்பலில் ஒரு ஆசாமி, வருவாய் ஆய்வாளரின் செல்போனை பறித்து தரையில் ஓங்கி வீசி உடைத்தார்.
இதையடுத்து அவருடன் சென்ற கிராம நிர்வாக அதிகாரியின் செல்போனை வாங்கிய, வருவாய் ஆய்வாளர் நடந்த சம்பவம் குறித்து மூலனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் வந்தால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த அந்த ஆசாமிகள், வேனை அங்கிருந்து ஓட்டிச்செல்ல முயன்றனர். அப்போது அந்த வேனை, வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார் நகர விடாமல் தடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசாமிகள், கார்த்திக்குமார் மீது வேனை ஏற்றி கொலை செய்ய முயன்றனர். இதனால் கார்த்திக்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். அதற்குள் அந்த வேன் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது. இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் கார்த்திக்குமாரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் வருவாய் ஆய்வாளர் மீது வேனை ஏற்றி கொலை செய்ய முயன்ற ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மூலனூர் அருகே உள்ள ஒத்தமான்துறை பகுதியை சேர்ந்த விவசாயி தனபால் (வயது 46), இவருடைய தந்தை சுப்பராயன் (75) மற்றும் தனபாலின் மகன் முகிலன் (21) என தெரியவந்தது. இதையடுத்து சுப்பராயனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.