

சிவமொக்கா,
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதன்பின் இந்திய வான்வழியே பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்த வந்தன. அவற்றை இந்திய விமான படையினர் விரட்டியடித்தனர்.
இந்நிலையில், கர்நாடகாவின் சிவமொக்கா நகரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தீவிரவாத பாதிப்பிற்கு ஆளானோம் என பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. பாகிஸ்தானில் அந்த இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் இருந்தன.
அந்த முகாம்களை அழிக்கும் பொறுப்பு அந்நாட்டிற்கு இல்லையா? ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. அதனால் பாலகோட்டில் நாங்கள் தாக்குதல் நடத்தினோம் என பேசினார்.