ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி 17-ந் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் விக்கிரமராஜா தகவல்

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விக்கிரமராஜா கூறினார்.
Published on

திருவாரூர்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்திற்கு பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

திருவாரூரில் மாநாடு

அடுத்த ஆண்டு மே 5-ந் தேதி 37-வது வணிகர் தின மாநாட்டை திருவாரூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் முதல்-அமைச்சரையும் மாநாட்டிற்கு அழைக்க உள்ளோம்.

ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஏற்படும் பாதிப்பு, உணவு பாதுகாப்பு துறை சட்டத்தால் ஏற்படும் பாதிப்பு, ஜி.எஸ்.டி.யால் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை சரிசெய்யும் வகையில் இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

நிவாரணம்

கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பில் இருந்து பொதுமக்கள், வணிகர்கள் இன்னும் மீளவில்லை. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் பல வீடுகள், கடைகள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். இதேபோல சேதமடைந்த சாலைகளையும் சீரமைக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்காக உழைப்பவர்களை வர்த்தகர்கள் தேர்வு செய்து வெற்றி பெற வைப்பார்கள். மக்களையும், வணிகர்களையும் மிரட்டுகின்ற வேட்பாளராக இருந்தால் அவர்களை புறக்கணிக்க வேண்டும் என மக்களிடம் வலியுறுத்துவோம். திருவாரூர் பழைய பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக வருகிற 12-ந் தேதி புதுடெல்லியில் தர்ணா போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டங்களுக்கு பிறகும் மத்திய, மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்கள் தீவிரமடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com