பஞ்சாப்பை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கனடாவில் உள்ள விவசாயம் சார்ந்த நிறுவனத்தில் ரூபாய் ஒரு கோடி சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது.
இன்றைக்கு இளைய தலைமுறையினர் பலரும் விவசாயத்தை விரும்பாத நிலை உள்ளது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கவிதா பாமன் என்ற மாணவி, ஜலந்தர் லவ்லி பல்கலைக்கழகத்தில் முதுநிலை விவசாய படிப்பு படித்தார். படிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்த காரணத்தால், கல்லூரியில் முதல் மாணவியாக கவிதா திகழ்ந்தார்.
அதற்கு உரிய பரிசாக, கனடாவின் பெரிய விவசாய நிறுவனமான மன்சான்டோ, நேர்காணல் நடத்தி கவிதாவை வருடம் ரூ. 1 கோடி சம்பளத்தில் வேலைக்கு எடுத்துள்ளது. அங்கு அவர் குறிப்பிட்ட ஆராய்ச்சிப் பணிகளை மேற்பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாணவர்கள் பலரின் கனவு நிறுவனமான இதில் கவிதாவுக்கு வேலை கிடைத்திருப்பது சக மாணவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்துப் பேசிய கவிதா, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வேலைக்குச் சேரும் நேரத்துக்காகக் காத்திருக்கிறேன். கல்வி கற்பதற்கும், கடினமாக உழைக்கிறவர்களுக்கும் விவசாயத்தில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன என்பதை எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு நிரூபித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.