கடந்த 3 ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.31½ கோடியில் பணிகள் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.31½ கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கூறியுள்ளார்.
Published on

திருமயம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்ட பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார். அப்போது திருமயம் ஊராட்சி ஒன்றியம் மல்லாங்குடியில், முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதுக்குளம் தூர்வாரும் பணியையும், பரணிக் குடிப்பட்டி அரையக்கண்மாய் ரூ.17 லட்சம் மதிப்பீட்டிலும், மேலக்கண்மாய் ரூ.23 லட்சம் மதிப்பீட்டியிலும் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016-17-ம் நிதியாண்டில் 136 பணிகள் ரூ.3 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டிலும், 2017-18-ம் ஆண்டில் 29 பணிகள் ரூ.7 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நடப்பு 2019-20-ம் ஆண்டில் 66 பணிகள் ரூ.20 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு, இதில் 63 பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 231 பணிகள் ரூ.31 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பல்வேறு கண்மாய்கள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டு மழை நீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது என்றார். இந்த ஆய்வின்போது நீர் வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் உமாசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com