வரதராஜன்பேட்டை,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கருவி மற்றும் அச்சு தொழிற்பிரிவுக்கான பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிடத்தினை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதையொட்டி அந்த கட்டிடத்தில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா, ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மருதமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராமச்சந்திரன், தாசில்தார் குமரய்யா, அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்கள் முத்துகுமரன் (ஆண்டிமடம்), நாகராஜன் (அரியலூர்), கூவத்தூர் கூட்டுறவு சங்க தலைவர் கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் டேவிட் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள், பயிற்றுனர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் (வடக்கு) அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலக கட்டிடத்தில் ரூ.19 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட உதவி மின் செயற்பொறியாளர் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ரத்னா திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்தார். விழாவிற்கு ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். இந்த உதவி மின் செயற்பொறியாளர் கட்டிடத்தில், உதவி மின் செயற்பொறியாளர் அறை, தளவாடங்கள் அறை, பணம் செலுத்தும் இடம் ஆகிய அறைகள் அமைக்கப் பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் சேகர், செல்வராஜ், சாமிதுரை, உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.