பாகிஸ்தானில் சிலிண்டர் விலை ரூ.10 ஆயிரத்தை தாண்டியது: பொதுமக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானில் கியாஸ் தட்டுப்பாடு நீடித்தால், சிலிண்டர் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 சிலிண்டர்
சிலிண்டர்
Published on: 

இஸ்லாமாபாத்.

பாகிஸ்தானில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எல்பிஜி கியாஸ்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கியாஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சில பகுதிகளில் ஒரு கிலோ எல்பிஜி ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெஷாவரில் ஒரு கிலோ கியாஸ் சுமார் ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஈரான் எல்லை மூடப்பட்டதால் தட்டுப்பாடு

பாகிஸ்தான் தனது எல்பிஜி தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது. குறிப்பாக, ஈரானில் இருந்து அதிக அளவில் கியாஸ் இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரான் - பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பால் கியாஸ் இறக்குமதி தடைபட்டுள்ளது. இதனால் சந்தையில் கியாஸ் விநியோகம் குறைந்து, விலை உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் நடப்பு அக்டோபர் மாதத்துக்கு ஒரு கிலோ எல்பிஜியின் அதிகாரப்பூர்வ விலையாக ரூ.279.34 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல பகுதிகளில் இதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமான விலைக்கு கியாஸ் விற்பனை செய்யப்படுகிறது.

விறகு அடுப்புக்கு மாறும் மக்கள்

கியாஸ் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் சமையல் கியாஸ் வாங்க முடியாத மக்கள் விறகுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், கியாஸ் தேவை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, தட்டுப்பாட்டைச் சரிசெய்து விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, கியாஸ் விநியோகத்தைச் சீரமைக்கவும், அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் கியாஸ் தட்டுப்பாடு நீடித்தால், சிலிண்டர் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com