சவுதி விமான நிலைய தாக்குதலில் 12 பேர் பலி: 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்

எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி திடீரென ஏவுகணைகள் பாய்ந்து வந்து வெடித்தன.
சவுதி விமான நிலைய தாக்குதலில் 12 பேர் பலி: 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Published on: 

ரியாத்,

ஏமனில் உள்நாட்டுப்போர் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. அரசுப்படையினரும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலின்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த வாரம் மட்டும் சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறி வைத்து 2 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தி யில், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு வளையங்களை உடைக்கும் விதமாக நேற்று ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது மீண்டும் ஒரு பயங்கரமான வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

12 பேர் பலி

மக்கள்தொகை அதிகம் கொண்ட ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி திடீரென ஏவுகணைகள் பாய்ந்து வந்து வெடித்தன. இந்த தாக்குதலில் ஒரு அமெரிக்கர், 2 வங்காளதேசத்தவர், 4 சவுதி குடிமக்கள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 309 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். குண்டுவெடிப்பின் தாக்கத்தால் விமான நிலையத்தின் கூரைகள் இடிந்து விழுந்தன. சமீபத்தில் ஏமனில் சவுதி ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்தது. அதனைத் தொடர்ந்து செங்கடல் பகுதிகளை ஹவுதிகள் கைப்பற்றியதால் மோதல் தீவிரமடைந்தது.

விரைவில் முடிவு எடுக்கப்படும்

தற்போது ரியாத் விமான நிலையத்தை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ள ஹவுதி அமைப்பினர், மக்கா மற்றும் மதினா தவிர மற்ற சவுதி வான்வழிகளை சர்வதேச விமானங்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளனர். இந்த தாக்குதலை ஐ.நா. சபை மற்றும் அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ ஆகியோர் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

இதற்கிடையே டிரம்ப், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா நடத்தும் எதிர்-தாக்குதலில் அமெரிக்கப் படைகளும் இணைவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும். இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com