கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்


கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்
x

Image Courtesy : PTI

கைதிகளை தேடிப்பிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நேபாள அரசின் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அந்நாட்டின் குடிமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஊழல் ஒழிப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். மந்திரிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தினரின் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கேள்வி எழுப்பி வந்தனர்.

இது நேபாள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்த நிலையில், பதிவு செய்யாத சமூக வலைத்தளங்களை நேபாள அரசு கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் தடை செய்தது. இது இளம் தலைமுறையினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள், இளைஞர்களை கொண்ட இளம் தலைமுறையினர் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த 8-ந்தேதி ஆயிரக்கணக்கில் கூடி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் சமூக வலைத்தள தடையை கண்டித்து அவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு நடத்தியும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து தலைநகரின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டது. இந்த போராட்டம் வன்முறையை தொடர்ந்து உள்துறை மந்திரி ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார். அத்துடன் போராட்டக்காரர்களின் கோபத்தை தணிப்பதற்காக சமூக வலைத்தளங்கள் மீதான தடையும் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ஆனாலும் போராட்டக்காரர்கள் அமைதியடையவில்லை. காத்மாண்டு மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. வன்முறை அதிகரித்ததை தொடர்ந்து பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். நாடாளுமன்றம், பிரதமரின் வீடு, ஜனாதிபதி அலுவலகம், சுப்ரீம் கோர்ட்டு என ஏராளமான அரசு கட்டிடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

எனவே ராணுவம் களத்தில் இறங்கியது. நேற்று முன்தினம் இரவில் இருந்து நாட்டின் பாதுகாப்பு பணிகளை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தி அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதனிடையே, கலவரத்திற்கு மத்தியில் நேபாளத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிறைகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் கைதிகள் தப்பியோடினர். கைதிகள் தப்ப முயன்றபோது போலீசாருடன் ஏற்பட்ட மோதல்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய கைதிகளில் வெகு சிலரே போலிசாரால் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர். சிலர் தாங்களாகவே சரணடைந்துள்ளனர். கைதிகளை உடனடியாக தேடிப்பிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நேபாள அரசின் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story