பாகிஸ்தானில் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை பரப்பிய 200 பேரின் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்

பாகிஸ்தானில் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை பரப்பிய 200 பேரின் கணக்குகளை டுவிட்டர் முடக்கியுள்ளது.
பாகிஸ்தானில் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை பரப்பிய 200 பேரின் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்
Published on

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசை பாகிஸ்தான் கடுமையாக விமர்சனம் செய்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. அவரது அரசின் செயல்பாடுகள், பாகிஸ்தானுக்கும், இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவிடமுள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை, சர்வதேச நாடுகள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறிவருகிறார். இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிடுவதற்காக பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பல்வேறு போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பாகிஸ்தானிலிருந்து பரப்பப்படும் இச்செய்திகள் இந்தியாவிலும் உலா வருகிறது. இதுபோன்ற போலி செய்திகளில் கடந்த ஆண்டுகளில் வேறு எங்கோ எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோக்கள் இணைக்கப்பட்டு பதற்றநிலை தொடர்வதாக சித்தரிக்கப்படுகிறது. இதுபோன்று ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த பாகிஸ்தானை சேர்ந்த 200 பேரின் கணக்குகளை முடக்கி டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் 200 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என செய்தி வெளியாகியுள்ளது.

இந்த டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்நிறுவனத்திடம் புகார் அளித்துள்ள பாகிஸ்தான் அரசு, அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக அந்நாட்டிலிருந்து வெளிவரும் டான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் டிஜிட்டல் மீடியா பிரிவு மற்றும் பாகிஸ்தான் தொலைத்தொடர்புத்துறை ஆகியவையும் டுவிட்டர் நிறுவனத்திடம் 200 பேரின் கணக்குகளை முடக்கியது தொடர்பாக புகார்களை அளித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் ஆஷிப் கபூர் பேசுகையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக, பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளை முடக்கியது குறித்து அந்தந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம் எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே அந்நாட்டு டிஜிட்டல் மீடியா பிரிவின் தலைவர் அர்சலன் காலித், " காஷ்மீர் குறித்து கருத்துக்களை தெரிவித்தமைக்காக பாகிஸ்தானை சேர்ந்த 200 பேரின் டுவிட்டர் கணக்குகளை முடக்கியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளோம். மேலும், இதுபோன்ற சூழல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும் வகையில் நாங்கள் தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியத்துடன் இணைந்து பேசி வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com