

பெய்ஜிங்.
பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்த 21 வயது நீச்சல் வீரர் ஒருவர், ஹாங்காங் தீவைச் சுற்றி 45 கிலோமீட்டர் தூரத்தைத் தனித்து நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஹாங்காங்-பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்த 21 வயது நீச்சல் வீரர் எமெரிக் பேயர். இவர் கடந்த நவம்பர் 2-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஹாங்காங்கில் உள்ள சாய் வான் நீச்சல் கூடம் அருகே தனது நீச்சல் பயணத்தைத் தொடங்கி, 45 கி.மீ தூரத்தை 10 மணி நேரம் 22 நிமிடங்கள் 59 வினாடிகளில் கடந்து பிற்பகல் 2:22 மணிக்கு வெற்றிகரமாக நிறைவு செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
அதிகாரப்பூர்வமாக 'HK360 நீச்சல்' என அழைக்கப்படும் இந்த நீச்சல் சுற்றில், கடந்த 2025-ம் ஆண்டு வாரிஸ் மில்ஸ் படைத்திருந்த முந்தைய சாதனையை (10 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகள்) முறியடித்து எமெரிக் பேயர் முதலிடம் பிடித்துள்ளார். முன்னாள் ஒலிம்பிக் வீரர் அலெக்ஸ் பாங் படைத்திருந்த சாதனையும் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த கடினமான கடல் சுற்றை யாருடைய உதவியுமின்றி தனித்து நிறைவு செய்த 11-வது நபர் மற்றும் மிக இளைய நீச்சல் வீரர் என்ற பெருமையையும் எமெரிக் பேயர் பெற்றுள்ளார். கடல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை ஆராய்ச்சிக்கான நிதி திரட்டும் உன்னத நோக்கத்துடன் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.