ஆஸ்திரேலியாவில் அமெரிக்க விமானம் நொறுங்கி விழுந்து 3 வீரர்கள் பலி - பிரதமர் இரங்கல்

ஆஸ்திரேலியாவில் அமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கி 3 கடற்படை வீரர்கள் பலியாகினர். இதனால் ராணுவ பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கான்பெரா,

அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், கிழக்கு திமோர் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஆஸ்திரேலியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள கடற்கரை அருகே இந்த பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியில் சுமார் 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்துகின்றனர். அப்போது அமெரிக்காவுக்கு சொந்தமான பெல் போயிங் வி-22 ஆஸ்ப்ரே என்ற விமானம் திவி தீவு நோக்கி சென்றது. இதில் 23 அமெரிக்க கடற்படை வீரர்கள் இருந்தனர்.

தீவில் விழுந்த விமானம்

ஆஸ்திரேலியாவில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெல்வில் தீவு அருகே விமானம் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது மெல்வில் தீவில் விமானம் விழுந்து சுக்குநூறாக நொறுங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அங்கு படுகாயம் அடைந்த ராணுவ வீரர்கள் சிகிச்சைக்காக விமானம் மூலம் டார்வின் நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மற்ற 20 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் இரங்கல்

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்த விபத்தில் உயிரிழந்த 3 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இது ஒரு துயரமான சம்பவம். இதில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசாங்கம் உறுதியாக உள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த கூட்டுப்போர் பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com