4 நாள் பயிற்சி, போருக்கு போ... புதினிடம் அழுது புலம்பும் வீரர்களின் தாய்மார்கள், மனைவிகள்

4 நாட்கள் பயிற்சி கொடுத்து, வீரர்கள் என கூறி ரஷிய போருக்கு அனுப்புவதற்கு எதிராக அவர்களது தாய்மார்கள், மனைவிகள் புதினிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
4 நாள் பயிற்சி, போருக்கு போ... புதினிடம் அழுது புலம்பும் வீரர்களின் தாய்மார்கள், மனைவிகள்
Published on

மாஸ்கோ,

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் தங்களது கணவர்கள் மற்றும் மகன்களை கட்டாயப்படுத்தி ராணுவத்திற்கு அனுப்பும் அரசின் முடிவுக்கு பெண்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி சி.என்.என். பத்திரிகை வெளியிட்டு உள்ள செய்தியில், ரஷியாவுக்கான டெலிகிராம் சேனல் பகிர்ந்துள்ள வீடியோவில், 4 நாட்களே பயிற்சி பெற்ற தங்களது அன்புக்கு உரியவர்களை தாக்குதல் குழுவில் சேரும்படி, மார்ச் மாத தொடக்கத்தில் கட்டாயப்படுத்தி உள்ளனர் என பெண்கள் கூறுகின்றனர்.

அவர்களில் ஒரு பெண், ஆயுதம் ஏந்திய 100 எதிரி படையினருக்கு எதிராக 5 பேரை அனுப்புகின்றனர். பலியாடுகள் போன்று எதிரிகளுக்கு எதிராக எனது கணவரும் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளார்.

அவர்கள் சொந்த நாட்டுக்கு சேவையாற்ற தயார்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால், புயலை எதிர்கொள்ளும் வீரர்களை போன்று அவர்களுக்கு தேவையான பீரங்கிகள், வெடிபொருட்களை கொடுத்து அனுப்புங்கள் என நாங்கள் கேட்டு கொள்கிறோம்.

முறையான பயிற்சியும் இல்லாமல், ஆயுதங்களும் இல்லாமல் சென்றுள்ள அவர்களை திரும்ப அழைத்து, அவர்களது கைகளில் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கொடுங்கள் என அதிபர் புதினிடம் அவர் கோரிக்கையாக கூறியுள்ளார்.

தொடர்ந்து சி.என்.என். வெளியிட்டு உள்ள செய்தியில், லட்சக்கணக்கான பேரை உக்ரைனுக்கு எதிரான போரில் அனுப்பும் ரஷியாவின் முடிவால், ரஷியர்களிள் பலர், அதுவும் இளைஞர்கள் நாட்டை விட்டு தப்பியோடும் வகையில் எதிர்ப்பும், எண்ணங்களும் வலுத்து உள்ளன.

இதுபற்றி பெயர் வெளியிட விருப்பம் இல்லாத நபர் ஒருவர் கூறும்போது, ரஷியாவை விட்டு நாங்கள் தப்பி ஓடுகிறோம். ஏனெனில் நாங்கள் வாழ விரும்புகிறோம். எங்களையும் உக்ரைனுக்கு அனுப்பி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம் என கூறியுள்ளார்.

ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு, வீரர்கள் என கூறி அனுப்பப்படுபவர்களின் குடும்பத்தினர் விமர்சனம் தெரிவித்து உள்ளதுடன், நடுத்தர பதவி வகிக்கும் அதிகாரிகளின் சரியான தலைமைத்துவம் இன்மை, தேவையான போதிய பயிற்சி கிடைக்க பெறாமை, போதிய சீருடைகள் இல்லாமை, தரமில்லாத உணவு மற்றும் மருந்து பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட தளவாட பொருட்களும் கிடைக்காத சூழல் ஆகியவற்றை அவர்கள் சுட்டி காட்டி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com