பாகிஸ்தானில் 5-வது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

பாகிஸ்தானில் கடந்த 1-ந்தேதி 4-வது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பாகிஸ்தானில் 5-வது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி
Published on

கைபர் பக்துன்குவா,

பாகிஸ்தான் நாட்டில் எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை வைரசின் பரவல் அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருகிறது. இதுபற்றி கைபர் பக்துன்குவா மாகாணத்தின் சுகாதார மந்திரி காசிம் அலி ஷா வெளியிட்டு உள்ள செய்தியில், சவுதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு 33 வயதுடைய நபர் கடந்த 7-ந்தேதி வந்து சேர்ந்துள்ளார்.

இதன்பின் பெஷாவர் நகரில் ஓட்டல் ஒன்றில் தங்கினார். அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, லோயர் திர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். சவுதியில் இருந்து திரும்பிய பின் உறவினர்கள் யாரையும் சந்திக்கவில்லை. பாகிஸ்தானிலும் வேறு யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் குரங்கம்மை தொற்றுக்கு ஆளான 5-வது நபர் இவராவார். கடந்த 1-ந்தேதி 4-வது நபருக்கு பாதிப்பு அறியப்பட்டது.

இதற்கு முன் தொற்று பாதித்த 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் தொற்று இல்லை என உறுதியான பின்னர், கடந்த 8-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக கடந்த ஆகஸ்டு மத்தியில் அறிவித்தது. இதன் பாதிப்பு ஆப்பிரிக்காவில் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என ஆப்பிரிக்காவில் 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஐரோப்பாவின் சில நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com