காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சோகம்

காபூல் விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சோகம்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கானில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் உடனடியாக இறங்கின. இதற்கிடையில் தலீபான்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழ விரும்பாத ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேற தொடங்கினர்.

இவர்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தின் வழியாகவே வெளியேறி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை ஐ.எஸ். கோராசன் பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்புகளையும், துப்பாக்கி சூட்டையும் நடத்தினர். இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் உள்பட 180-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 1,300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா டிரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல் நடத்தியது. இதில் காபூல் குண்டு வெடிப்பு சதிகாரன் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரத்துக்குள் காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.

ஜோ பைடன் எச்சரித்தபடியே மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் காபூல் விமான நிலையத்தை நேற்று அதிரவைத்தது. நேற்று மாலையில் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டை வீசினர்.

ஆனால் இந்த ராக்கெட் தனது இலக்கான காபூல் விமான நிலையத்தை தாக்குவதற்கு பதிலாக விமான நிலையத்தின் வடக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது. நெரிசலான பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது ராக்கெட் விழுந்து வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்ததது.

இந்த ராக்கெட் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் காபூலை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் வியாழக்கிழமை விமான நிலையத்துக்கு வெளியே குண்டு வெடிப்பை நிகழ்த்திய ஐ.எஸ். கோராசன் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

இதனிடையே பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதல் குறித்த செய்தி வெளியான சிறிது நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்துவதற்காக காரில் சென்று கொண்டிருந்த தற்கொலை படை பயங்கரவாதிகளை டிரோன் தாக்குதல் நடத்தி கொன்றதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com