நேபாளத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

உள்ளூர் அதிகாரிகள் அந்தப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதாகவும், அங்கு செல்வது பாதுகாப்பானதல்ல என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
நேபாள மீட்பு பணிகள்
நேபாள மீட்பு பணிகள்
Published on: 

நேபாளத்தில் உள்ள ஷே-போக்சுண்டோ தேசிய பூங்கா பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக சிக்கித் தவித்த 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் இன்று பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 6 பேர் கடந்த 1-ம் தேதி முதல் பனிப்பொழிவு காரணமாக வெளி உலகத் தொடர்பின்றி தவித்து வந்தனர்.

இதையடுத்து, இன்று காலை தனியார் ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டதாக டோல்பா மாவட்ட காவல் அலுவலக செய்தித் தொடர்பாளர் பினயா சிங் தெரிவித்தார். மீட்கப்பட்ட 6 பேரும் டோல்பா மாவட்டத்தில் உள்ள டுனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்திய சுற்றுலாப் பயணிகள்

காத்மாண்டுவில் இருந்து சுமார் 300 கி.மீ. வடமேற்கே அமைந்துள்ள ஷே போக்சுண்டோ கிராமப்புற நகராட்சியின் 8-வது வார்டுக்கு உட்பட்ட தோ பகுதிக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்றிருந்தனர். அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் அவர்கள் சிக்கிக்கொண்டனர். நேற்று ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரைத் தரையிறக்க முடியாததால் மீட்புப் பணி கைவிடப்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் அந்தப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதாகவும், அங்கு செல்வது பாதுகாப்பானதல்ல என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும், அந்த எச்சரிக்கையையும் மீறி இந்திய சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

அனுமதி பெறாமல்

மேலும், தேவையான நிர்வாக அனுமதிகளைப் பெறாமல் இந்திய சுற்றுலாப் பயணிகள் அப்பர் டோல்பா பகுதிக்குச் சென்றதாக நேபாள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மோசமான வானிலை மற்றும் தொடர் பனிப்பொழிவு அபாயம் காரணமாக மலைப்பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நிர்வாகத்தினரும் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

நேபாள இமயமலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் பனிப்பொழிவில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபரில், பிரிட்டனைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 15 மலையேற்ற வீரர்கள் மஸ்தாங் பகுதியில் உள்ள ஹிடன் பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவில் சிக்கினர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். இதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மஸ்தாங்-டோல்பா எல்லைப் பகுதியில் பனியில் சிக்கிய 2 நேபாள சுற்றுலாப் பயணிகளும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

X