

பெய்ஜிங்,
சீனாவின் ஹாங்காங் பகுதியில் பார்சல் வாங்கப்பட்ட நூடுல்ஸ் உணவிற்குள், உயிருடன் கூடிய சிறிய எலிக்குட்டி ஒன்று துடித்துக் கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டின் ஹாங்காங்கின் குவாய் சங் பகுதியில் 'வா ஜெர்' என்ற உணவகம் செய்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை மைக் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) மதியம் பெண் ஒருவர் சாடே பீப் நூடுல்ஸ், ஹாம் ஆம்லெட் மற்றும் ஒரு பானம் ஆகியவை அடங்கிய ஒரு செட் உணவு பார்சல் வாங்கியுள்ளார். இதையடுத்து அவர் வீட்டிற்குச் சென்று அந்த உணவை சாப்பிடுவதற்காக டப்பாவைத் திறந்தார்.
டப்பாவில் அடர்ந்த சாஸ் மற்றும் நூடுல்ஸ் துண்டுகளுக்கு நடுவே, இன்னும் ரோமங்கள் கூட முளைக்காத, புதிதாகப் பிறந்த சிறிய எலிக்குட்டி ஒன்று உயிருடன் கை, கால்களை அசைத்தபடி அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக அந்த அதிர்ச்சி காட்சியைத் தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து உடனடியாக ஹாங்காங்கின் உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறைக்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அந்த உணவிலிருந்து எலிக்குட்டியைப் பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றனர். மேலும், சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அங்கு போதிய சுகாதார பராமரிப்பு இல்லாதது கண்டறியப்பட்டதை அடுத்து, உணவுப் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் அந்த உணவகத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவகங்களில் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.