இஸ்ரேலில் புதிய திருப்பம்; பிரதமர் நெதன்யாகு, எதிர்க்கட்சி தலைவர் ஐசன்கோட் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் வழிகாட்டுதலின்படி, நெதன்யாகுவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஐசன்கோட் இன்று ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
நெதன்யாகு, இஸ்ரேல்
Published on: 

டெல் அவிவ்

இஸ்ரேலில் புதிய திருப்பம் பிரதமர் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஐசன்கோட் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

நெசட் என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் கடந்த அக்டோபர் 27-ந்தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ல் நடந்த ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, அந்த நாட்டில் நடந்த முதல் தேர்தல் இதுவாகும். இதில், பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களித்தனர்.

பெரும்பான்மை இல்லை

அடுத்த நாளில் (அக்டோபர் 28) வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், நெதன்யாகு அணிக்கு 53 இடங்களும், ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி அணிக்கு 48 இடங்களும் கிடைத்தன. அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றன. 120 உறுப்பினர்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை. இதனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அரபு கட்சிகளின் ஆதரவு ஐசன்கோட்டுக்கு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, மொத்தம் 67 உறுப்பினர்களின் ஆதரவுடன் யஷார் கட்சியின் தலைவரான ஐசன்கோட் ஆட்சியமைக்கும் வேலையில் இறங்கினார். இதன்படி, நாடாளுமன்ற பதவிகளுக்கான ஆட்களை தேர்வு செய்யும் ஆலோசனை மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மாற்று பிரதமர்

இதன்படி, இஸ்ரேல் நாட்டின் புதிய சபாநாயகராக, முன்னாள் மந்திரியான மதன் கஹானா அறிவிக்கப்பட்டு உள்ளார். முன்னாள் பாதுகாப்பு மந்திரியான அவிக்தோர் லைபர்மேனை வெளிவிவகார துறை மற்றும் பாதுகாப்பு கமிட்டிக்கான தலைவராகவும் நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நெதன்யாகு கூறும்போது, எதிர்க்கட்சி தலைவர் ஐசன்கோட் முதலில் பிரதமர் ஆகட்டும். மாற்று பிரதமராக செயல்பட நான் தயார் என்று கூறினார்.

2.5 லட்சம் கூடுதல் வாக்குகள்

அவர் தொடர்ந்து, பெரிய கட்சியின் தலைவரே அரசு அமைக்க வேண்டும் என்ற கொள்கையை ஒத்தி வைக்கவும் தயாராக இருக்கிறேன். சொல்லப்போனால், ஐசன்கோட்டின் யஷார் கட்சியை விட 2.5 லட்சம் கூடுதல் வாக்குகளை எங்களுடைய லிகுட் கட்சி பெற்றுள்ளது என்றார்.

ஐசன்கோட்டுக்கு டிசம்பர் 6-ந்தேதி வரை ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது. இதுதவிர, 14 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் கேட்கவும் அவருக்கு வாய்ப்பு உள்ளது. இதனால், இஸ்ரேல் அரசியலில் அடுத்து என்ன நடக்க போகிறது? என்று உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

எச்சரிக்கை

இந்த சூழலில், நெதன்யாகு கூறும்போது, இஸ்ரேலுக்கு எதிரான ஆபத்துகள் தொடர்ந்து தீர்க்கப்படாமல் உள்ளன. ஆனால், அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனில்லாமல் அல்லது அரபு கட்சிகளின் கூட்டணியுடன் அரசு அமைப்பது ஆபத்து என்றும் எச்சரித்து உள்ளார்.

இது, ஐசன்கோட்டை சிந்திக்க வைத்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் வழிகாட்டுதலின்படி, நெதன்யாகுவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஐசன்கோட் இன்று ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இதற்காக, இஸ்ரேலில் கடலோர நகரான ஹெர்ஜிலியாவில் உள்ள டேன் அகாடியா ஓட்டலில் இருவரும் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

நேர்மையான பேச்சுவார்த்தை

இதற்கேற்ப ஐசன்கோட் கூறும்போது, லிகுட் கட்சி கண்ணியத்துடன் ஒன்றிணைய தயார் என்றால், அடுத்து என்ன நடக்க போகிறது? என்று காண நான் தயாராக இருக்கிறேன். அதனால், நெதன்யாகு மற்றும் அவருடைய குழுவினருடன் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அழைக்கிறேன் என்று கூறினார்.

நெதன்யாகுவை வெளியேற்றி விட்டு, ஒரு புதிய கூட்டணியை அமைக்க ஐசன்கோட் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனினும், அரபு-இஸ்ரேலிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கும் தயக்கம் காட்டி வருகிறார். இந்த சூழலில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும், கூட்டணி அரசு அமையாவிட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

X