

ஆம்ஸ்டர்டாம்,
காசா மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராகவும் ஆம்ஸ்டர்டாம் வீதிகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒன்றுதிரண்டு மாபெரும் பேரணியை நடத்தியுள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் போர் மற்றும் மனிதநேயமற்ற தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான வர்த்தக தடைகளை விதிக்க கோரியும், ஆயுத விற்பனையை முழுமையாக நிறுத்த கோரியும் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் சிவப்பு நிற உடைகளை அணிந்து கலந்து கொண்டனர். நகரின் முக்கிய சாலைகளை முடக்கியபடி, "பாலஸ்தீனத்திற்கு விடுதலை வழங்கு" என்று விண்ணதிர முழக்கமிட்டவாறு அவர்கள் பேரணியாக சென்றனர். கட்டுக்கடங்காத இந்த பிரமாண்ட மக்கள் கூட்டத்தால் ஆம்ஸ்டர்டாம் மாநகரமே முற்றிலுமாக ஸ்தம்பித்தது.
மேலும், காசா விவகாரத்தில் இஸ்ரேல் அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தவறிய தங்கள் சொந்த நாட்டு அரசுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். தலைநகரில் வெடித்துள்ள இந்த பிரமாண்ட மக்கள் போராட்டத்தால், நெதர்லாந்து அரசுக்கு புதிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.