

டாக்கா,
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்கா அருகே உள்ள நாராயண்கஞ்ச் நகரில் 3 மாடிகளைக் கொண்ட மசூதி ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி அளவில் மசூதியில் இருந்த ஏ.சி. திடீரென வெடித்து சிதறியது.
அதனைத் தொடர்ந்து 5 ஏ.சி.க்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் குண்டு வெடித்தது போல் மசூதியே அதிர்ந்தது. ஏ.சி.க்கள் வெடித்ததை தொடர்ந்து மசூதியில் தீ பற்றியது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் மசூதியின் 3 மாடிகளுக்கும் பரவியது.
இதனால் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனாலும் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஏராளமான தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முற்பட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த கோர விபத்தில் 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். மேலும் 36 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 36 பேரில் 15 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 16 ஆனது.
படுகாயமடைந்த மற்ற 21 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே இந்த விபத்து குறித்து நாராயண்கஞ்ச் தீயணைப்புத் துறையின் தலைமை அதிகாரி அப்துல்லா அல் அரேபின் கூறுகையில் மசூதிக்கு அடியில் டைட்டஸ் வாயுக் குழாய் செல்கிறது. அந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு மசூதிக்குள் வாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம். மசூதியின் அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டிருந்தநிலையில் யாரேனும் ஏசியை இயக்கி இருக்கலாம் என்றும் அதனால் இந்த விபத்து நேரிட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம் எனக் கூறினார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுதவிர மாநில எரிவாயு பரிமாற்றம் மற்றும் வினியோக நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.