ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல்: காபூலில் சிக்கி தவித்த 329 இந்தியர்கள் மீட்பு

காபூலில் சிக்கி தவித்த 329 இந்தியர்கள் இன்று ஒரே நாளில் மூன்று விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல்: காபூலில் சிக்கி தவித்த 329 இந்தியர்கள் மீட்பு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரம் தலீபான்கள் வசம் சென்றுள்ளது. இதனால், அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் வெளியேற்றி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை இந்தியா அழைத்து வர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காபூலில் சிக்கி தவித்த 329 இந்தியர்கள் இன்று ஒரே நாளில் மூன்று விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். முன்னதாக இன்று காலை 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பின்னர் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் காலை 10.15 மணியளவில் விமானம் தரையிறங்கியது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து விமானங்கள் காபூலில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்தன. ஏர் இந்தியா விமானத்தில் 87 இந்தியர்கள், நேபாளத்தை சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தம் 89 பேர் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அந்த விமானம் தஜிகிஸ்தான் வழியாக பயணித்து டெல்லிக்கு இன்று அதிகாலை வந்தடைந்தது. மற்றொரு இன்டிகோ விமானம் மூலம் 135 இந்தியர்கள் கத்தார் தலைநகர் தோகா வழியாக அழைத்து வரப்பட்டனர். இந்த விமானமும் இன்று அதிகாலை டெல்லியில் தரை இறங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com