

காபுல்,
ஆப்கானிஸ்தானில் பள்ளியில் ஏற்பட்ட வெடி வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள குனார் மாகாண தலைநகர் அசாதாபாத் புறநகரில் உள்ள அந்தர் செர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று காலை 10 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 90-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து குனார் மாகாண கலாசார மற்றும் தகவல் துறை இயக்குநர் ஷமி உல் ஹக் பயான் கூறுகையில், "சுரங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 15 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்" என்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளி வளாகத்தில் கையெறி குண்டு வீசப்பட்டதில் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.